உத்தரபிரதேச கலவர வழக்கில் கைதான ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல்
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்திலும் தொடர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் அவரை தங்கள் காவலில் எடுத்தனர்.
இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆசிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கெரி மாவட்ட சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
source https://www.hindutamil.in/news/india/730263-union-minister-son-ashish-mishra-hospitalised-with-dengue.html?frm=rss_more_article