பெங்களூருவில் ஐபோன் தொழிற்சாலை தாக்கப்பட்டதில் ரூ.437 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் 5 ஆயிரம் ஒப்பந்த பணியாள‌ர்களுக்கு கடந்த 7 மாதங் களாக‌ குறைந்த ஊதியம் வழங் கப்பட்ட‌தாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பணியாளர்கள் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நரசாப்புரா போலீஸார், இதுவரை 149 பணியாள‌ர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரி டி.டி.பிரசாத் நேற்று கோலார் மாவட்ட ஆட்சியர், காவல்கண்காணிப்பாளர், கர்நாடக தொழிலாளர் துறை இயக்குநர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தார். அதில், ‘‘ஐபோன் தொழிற்சாலை தாக்கப்பட்ட போது 6 கார்கள், தொழிற்சாலையின் முக்கிய இடங்கள், கணிணிகள், மடி கணிணிகள், உதிரி பாகம் தயாரிக்கும் இயந்திரங்கள் தாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஐபோன்கள் திருடப்பட்டுள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஐபோன்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் சேதமடைந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.437 கோடி என நிறுவனத்தின் நிர்வாக நிபுணர் குழுஅறிக்கை அளித்துள்ளது. எனவேகர்நாடக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதே வேளையில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/611881-iphone-factory-case.html?frm=rss_more_article